டி.கே.பட்டம்மாள் (1919-2009)
பெண்கள் மேடையேறிப் பாடுவதும், கச்சேரி செய்வதும் ஏற்றுக் கொள்ளாத அந்த காலத்தில், இசையை தனது முழுநேரப் பணியாக ஏற்றுக் கொண்டு சாதனை படைத்தவர். இளம் வயதிலேயே மிகச் சிக்கலான பல்லவிகளைக் கூட, தனது கனமான குரலில் பாடி வியப்பை ஏற்படுத்தியவர்.
பட்டம்மாளின் இசைத்திறனை கேள்விப்பட்ட நைனாபிள்ளை, தியாகராஜ ஆராதனை விழாவில், அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தார். தியாகராஜ கீர்த்தனையில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அளிக்கும் அந்த வாய்ப்பு, சிறு வயதிலேயே பட்டம்மாளுக்கு கிடைத்தது. "ரக்ஷ பெட்டாரே' எனத் துவங்கும் "பைரவி' ராக பாடலை பாடி வியப்பை ஏற்படுத்தினார்.
கர்னாடக சங்கீதத்தால் தமிழக நெஞ்சங்களை தாலாட்டியவர்.
ராகம், தானம், பல்லவி ஆகிய மூன்றிலும் மேடைக்கச்சேரி செய்த முதல் பெண்மணி அவர். 1929லேயே சென்னை வானொலியில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
1939ம் ஆண்டு கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளியான தியாக பூமியில் முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது.
1949ம் ஆண்டில் "பாரத சமுதாயம் வாழ்கவே' எனும் வாழ்க்கைப் படத்தில் வெளியான பாட்டு மிகப்பிரபலம் ஆனது. சுதந்திர தினம் என்றாலே இவரது குரல் எல்லோரது மனதிலும் ரீங்காரம் இடும்.அவரது இசைப்பயணம் ,இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பட்டம்மாளை ராஷ்டிரபதி பவன் அழைத்து பாடச் சொல்லி சிறப்பித்தார்.
சிக்கலான பல்லவிகளை பாடி, தாளங்களுக்கேற்ப அதன் நுட்பங்களை திறம்பட வெளிப்படுத்தியதால், இவர் "பல்லவி பட்டம்மாள்' என்றே அழைக்கப்பட்டார். பட்டம்மாள் பாணி எனும் தனிப்பாணியே சங்கீத உலகில் உருவானது.
சென்னை மியூசிக் அகடமியின் சங்கீத கலாநிதி விருதும் ஜனாதிபதியிடம் பத்ம பூஷண் விருதும் பெற்றார். 1998ம் ஆண்டில், பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 2002ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகடமியின் 75வது ஆண்டு விழாவில் பட்டம்மாள் அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு விருது வழங்கினார்.
வாழ்நாளின் பெரும்பகுதியை கர்னாடக இசைக்காகவே வாழ்ந்த பட்டம்மாளின் மறைவு இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
3 கருத்துக்கள்:
அரிய பெண்மணி அவர். பெரிய இழப்பு. நல்ல இடுகை. வாழ்த்துகள்.
ஆமாம்.. இன்னொரு M.S.சுப்புலக்ஷ்மி-யை நம் நாடு இழந்தது...
நன்றி கார்த்திக் & பாலா...,
Post a Comment